கெங்கவல்லி, மே 16: வீரகனூரில் விவசாயி டூவீலரிலிருந்து 4 பவுன் நகை, ₹57 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜ்மோகன்(50). இவர் வீரகனூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ள தனது மனைவியின் 4 பவுன் தங்க வளையலை மீட்பதற்காக தனது டூவீலரில் வீரகனூர் வந்தார். பைனான்ஸ் நிறுவனத்தில் நகையை மீட்டு தனது டூவீலர் பெட்டியில் வைத்து விட்டு, வீரகனூர் சந்தைப்பேட்டை அருகில் டூவீலரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடையில் ஜூஸ் குடிக்க சென்றார்.
பின்னர் திரும்பி வந்தபோது டூவீலரில் இருந்த பெட்டி திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், டூவீலர் பெட்டியில் வைத்திருந்த 4 பவுன் தங்க வளையல், ரூ.57 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டதை பார்த்து ராஜமோகன் கூச்சலிட்டார். இதுகுறித்து வீரகனூர் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் விவசாயியின் டூவீலரிலிருந்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.