ஈரோடு, நவ.20: பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றம் மலைப்பயிர்கள் துறை மூலம் 2023-2024ம் ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் விருதுகள் வழங்குதல் எனும் இனத்தின் கீழ் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது.
இதில், விருது பெற முக்கிய காரணிகளாக அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண் வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுக்கள் மூலம் சிறந்த இரண்டு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் முதல் பரிசு பெறும் விவசாயிக்கு ரூ.15 ஆயிரமும், 2ம் பரிசு பெறும் விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
எனவே, சொந்த மற்றும் குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விருப்பமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை இணையதளமான www.tnhoriticulture.tn.gov.in மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.100 கட்டணத்துடன் அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.