செங்கல்பட்டு, செப்.3: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 356 ஏரிகளின் பட்டியல் செங்கல்பட்டு வட்டத்தில் 11 ஏரிகளும், செய்யூர் வட்டத்தில் 110 ஏரிகளும், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் 77 ஏரிகளும், திருப்போரூர் வட்டத்தில் 22 ஏரிகளும், வண்டலூர் வட்டத்தில் 9 ஏரிகளும், மதுராந்தகம் வட்டத்தில் 125 ஏரிகளும், பல்லாவரம் வட்டத்தில் 2 ஏரிகளும் உள்ளன, செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியிடின்படி இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண், களிமண்ணின் அளவு, விவசாய பயன்பாட்டில் நஞ்சை நிலம் – இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டர் லோடுகள், புஞ்சை நிலமாக இருந்தால் – இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர் லோடுகள் மேலும், மண்பாண்ட தொழில் பயன்பாடு மண்பாண்டம் தயாரித்தல் 20 டிராக்டர் லோடுகள் இலவசமாக எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழகங்கப்படுகிறது.
மனு செய்வதற்கான நிபந்தனைகள்: மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண், களிமண், தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய்,ஏரி,குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது குத்தகை பதிவேட்டின் பதிவு செய்யப்பட்டு குத்தகைதாரராக இருக்க வேண்டும்.
மேலும் மண்பாண்ட தொழிலாளராக இருப்பின் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அதனை உறுதி செய்ய வேண்டும். நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை / புஞ்சை), விவசாய நிலத்தின் விஸ்தீரணம்/ குத்தகை உரிமம் பெற்று விவசாய பணி மேற்கொள்ளப்பட்டால் அதன் விபரம் மற்றும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றுடன் அனுமதி கோரும் வண்டல் மண்/களிமண் கனிமத்தின் அளவு ஆகிய தகவல்களுடன் தங்களது விண்ணப்பத்தினை tnesevai.tn.gov.in (Online website) இணையதள முகவரி வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல் மண்/களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை செங்கல்பட்டு ஆகியோரை அணுகலாம்.