நெல்லை, ஆக. 26: நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான அளவை விட 93 சதவீதம் மட்டுமே மழை கிடைத்துள்ளதாக நெல்லையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது: நெல்லை மாவட்டத்தில் ஜூலை 2023 மாதத்தில் 22.975 மி.மீ மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவைவிட 12.97 சதவீதம் குறைவாகும். நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் 1.60 மி.மீ மழை மட்டுமே கிடைத்துள்ளது வளமையான மழையளவை விட இது 93.13 சதவீதம் குறைவாகும். இதனால் ஏற்பட்டுள்ள பயிர் சாகுபடி குறைவு குறித்த விரிவான விபரம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன் கார் பருவத்தில் 870 ஹெக்டர் மற்றும் கார் பருவத்தில் 2 ஆயிரத்து 289 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 251 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1412 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாசிப்பட்டத்தில் 416 ஹெக்டேர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு சர்வேதச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும். நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலங்களின் மண் வளத்தை பெருக்கிட குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் 199 குளங்களில் 498 விவசாயிகள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 18 க.மீ வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர்.
விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கூடுதல் பயனாளிகள் வண்டல் மண் எடுத்து பயன்பெற கனிமவளத்துறை மற்றும் வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு 2023-24ம் ஆண்டிற்கு நெல்லை மாவட்டத்தில் 41 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு 28 உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் 13 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளாக 10 ஏக்கர் வரை தரிசாக உள்ள தொகுப்புகள் கண்டறியும் பணியும், தகுதி வாய்ந்த பயனாளிகளின் விபரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 100 தென்னை மரக்கன்றுகள் விவசாய குடும்பங்களுக்கு தலா 2 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில், வேளாண் மை உழவர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் மானியத்துடன் இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருவருக்கு சிப்பம் அறை கட்டுவதற்கான ரூ.4 லட்சத்திற்கான காசோலை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், உழவர் பயிற்சி நிலையமும் இணைந்து நடத்திய கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சியில் அங்கக வேளாண்மையில் பயிற்சி பெற்ற 15 விவசாயிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம், வேளாண்மை துணை இயக்குநர்கள் கிருஷ்ணகுமார், சுபசெல்வி, ஜாய்வின் சோபியா, வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.