காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, கூரம் வதியூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், 5 விவசாயிகளுக்கு ரூ.2,70 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன், விப்பேடு மற்றும் வளத்தோட்டம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 10 விவசாயிகளுக்கு 8 லட்சத்து 562 ரூபாய் மதிப்பீட்டில் பயிர்க்கடன், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 3 விவசாயிகளுக்கு 15 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான (நேரடி நெல் விதைப்பு கருவி, மண்புழு உர படுக்கை) போன்ற வேளாண் இடுப்பொருட்கள் மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி 2023-24ல் வென்ற விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000க்கான காசோலையும், இரண்டாம் பரிசாக ரூ.10,000க்கான காசோலையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ராஜ்குமார், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.