ஈரோடு, செப். 20: ஒன்றிய அரசின் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து மாவட்ட வேளாண் துணை அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாக தலா ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்குகிறது. இத்தொகை மூலம், இடுபொருட்கள் வாங்குதல், வேளாண் செலவினங்களுக்கு பயன்படுத்த யோசனை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு, 12 தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, விவசாயிகள் e-KYC முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்து, தங்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும். இதனை இணைக்க பலமுறை வாய்ப்புகள் வழங்கியும் விவசாயிகள் சரிவர பயன்படுத்தி கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே அந்தந்த பகுதி இசேவை மையங்கள், தபால் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து ஊக்கத்தொகை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.