கிருஷ்ணகிரி: பன்னிஅள்ளி கிராமத்தில் எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஅள்ளி கிராமத்தில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தலைமை வகித்து, இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவி, கொள்ளு விதை, மா நுண்ணூட்டச் சத்துக் கலவை மற்றும் நாட்டுக் கோழிகளுக்கான புரோபீட்ஸ் நுண்ணுயிர் நல ஊக்கி மருந்துகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இடு பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்படும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு வேளாண்மை அறிவியல் மையத்தை அணுகலாம் என்றார்.