விருத்தாசலம், மே 31: விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையம் வந்தபோது பொதுமக்கள் வரவேற்றனர். விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக தினமும் சென்று வருகிறது. ஆனால் இந்த ரயில் பெண்ணாடத்தில் நின்று செல்லாமல் இருந்து வந்தது. இது சம்பந்தமாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுப்பிரசாத் மற்றும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோருக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் இந்த ரயில் பெண்ணாடத்தில் நின்று செல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத் மற்றும் திருமாவளவன் ஆகியோர் முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் விழுப்புரம்- ராமேஸ்வரம் சென்றுவரும் அதிவிரைவு சிறப்பு ரயில் பெண்ணாடத்தில் நின்று செல்ல உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் (எண்: 06105) காலை 5.05 மணிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து விழுப்புரம் செல்லும் ரயில் (எண்: 06106) இரவு 9.30 மணிக்கும் பெண்ணாடத்தில் நின்று செல்கிறது. அதனை வரவேற்கும் விதமாக திட்டக்குடி சமூக ஆர்வலர் ராஜதுரை, இறையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி, பெண்ணாடம் நகர தலைவர் கந்தசாமி, விருத்தாசலம் சுபமணிகண்டன், மேற்கு மாவட்ட செயலாளர் இருதயசாமி, மாவட்ட துணைத்தலைவர் எஸ்மா கந்தசாமி உள்ளிட்டோர் ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.