விழுப்புரம் ஜூலை 5: விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊர்புற நூலகரை தரையில் உட்கார்ந்து வேலை வாங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. விழுப்புரம் அருகே அரசமங்கலத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி சிவசங்கரி (48). இவர் அதே பகுதியில் பொது நூலக துறையின்கீழ் செயல்படும் ஊர்புற நூலகராக பணியாற்றி வருகிறார். மேலும் சென்னகுணம் கிராமத்தில் உள்ள நூலகத்துக்கும் பொறுப்பு நூலகராக இருந்து வருகிறார். சென்னகுணத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லாததால் தற்போது தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த வாடகையை வாங்குவதற்காக நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் கடிதம் எழுதி கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். உடனே சிவசங்கரி தரையில் உட்கார்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அவருடன் வந்த கணவர் விஸ்வநாதன் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளார். அதில், பட்டியலினத்தைச் சேர்ந்த என் மனைவியை அதிகாரிகள் தரையில் உட்கார்ந்து வேலை வாங்கி விட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் காசிம் கூறுகையில், சென்னகுணம் நூலக கட்டிடத்திற்கான வாடகை இதுவரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வழங்கி வந்ததாக ஊர்புற நூலகர் தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென்று இந்த மாதம் வாடகைக்காக வந்திருந்தார்.
அப்போது கடிதம் எழுதி கொடுக்குமாறு அங்கிருந்த கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அங்கு அவ்வளவு நாற்காலிகள் காலியாக இருந்தபோதும் வேண்டுமென்று தரையில் உட்கார்ந்து கடிதம் எழுதத் தொடங்கியதுமே அவருடன் வந்த கணவர் இதனை வீடியோவாக எடுத்து அதிகாரிகளையும், அரசையும் திட்டமிட்டு அவமதிக்கும் ேநாக்கில் இதுபோன்று வீடியோவை வலைதளத்தில் வைரலாக்கி உள்ளார். வாடகை கேட்டு கடிதம் அனுப்ப நாங்கள் ஸ்டாம்பு கொடுத்துள்ளோம், தபாலில் அனுப்பினால் போதும். நேரில் வர வேண்டிய அவசியமே இல்லை. கணவருடன் திட்டமிட்டு வந்து நாடகம் நடத்தி வீடியோவை போட்டு அவமதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக நூலக உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.