விழுப்புரம், ஜூன் 4: விழுப்புரம் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் ேபருந்து நிலையத்தில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 10ம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் அதே ஆண்டு மே 1ம் தேதியும் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதலமைச்சரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே அவதூறு வழக்குகள் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி மணிமொழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதிகாசெந்தில், தமிழரசன் ஆகியோர் நேரில் வராதது குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இம்மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமெனவும் கூறியிருந்தனர். தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.