விழுப்புரம், ஆக. 22: விழுப்புரத்தில் டீக்கடையில் விற்பனை செய்யப்பட்ட கேக்கில் பல்செட் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்தவர் முபாரக் அலி. காங்கிரஸ் பிரமுகரான இவர், நேற்று காலை தனது நண்பர்களுடன் நடைப்பயிற்சி சென்று விட்டு, கிழக்கு பாண்டி ரோட்டிலுள்ள டீக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த கேக்கை தனது நண்பர்களுடன் முபாரக் அலி வாங்கி சாப்பிட்ட போது, 4 பற்கள் கொண்ட பல்செட் அதிலிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து முபாரக் அலியும், அவரது நண்பர்களும் டீக்கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கேக் தயாரிப்பில் எதிர்பாராமல் பல்செட் விழுந்துள்ளதா? இதில் யார் தவறு? என்பது குறித்தும் உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.