விழுப்புரம், ஜூன் 20: விழுப்புரம் அருகே நிலத்தில் மாடு மேய்ந்த தகராறில் இளம்பெண்ணை படுகொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் அணைக்கட்டு சாலையைச் சேர்ந்தவர் வரதப்பிள்ளை மனைவி தேவகிஅம்மாள்(60). அவரது மகள் ரேவதி(40). திருமணமாகாத இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்திற்கு 8 மாதத்திற்கு முன்பு சின்னசெவலையை சேர்ந்த முத்துகண்ணன்(60) என்பவரது மாடு தேவகிஅம்மாள் நிலத்தில் மேய்ந்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு முத்துகண்ணன் கடந்த 2021 ஏப்ரல் 10ம் தேதி அவரது வீட்டில் தாய், மகள் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு கொலை செய்யும் நோக்கில் முத்துகண்ணன் அத்துமீறி நுழைந்து தேவகிஅம்மாவை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றபோது அவர் வீட்டின் பின்பக்க கதவை வெளிப்புறமாக சாத்திக்கொண்டு தப்பினார்.
பின்னர் முத்துகண்ணன் வீட்டு ஹாலில் இருந்த மகள் ரேவதியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த ரேவதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவகிஅம்மாள் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துகண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட முத்துகண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட முத்துகண்ணன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.