விழுப்புரம், மே 30: விழுப்புரம் அருகே தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 6 மணியளவில் புறப்பட்டு வந்தது. விழுப்புரம் வழியாக வந்த பேருந்து தொடர்ந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நெய்வேலிக்கு சென்றது. சித்தணியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளே இருந்தனர். இதனிடையே விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் பஞ்சமாதேவி பேருந்து நிறுத்தத்தின் அருகே சென்றபோது எதிரே தாறுமாறாக ஒரு மொபட் வந்துள்ளது. அதன் மீது மோதாமலிருக்க டிரைவர் பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரமாக உள்ள சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை கண்ணாடியை உடைத்து அப்பகுதி மக்கள் மீட்டனர். படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து 6 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் டிரைவர் சபரிநாதன், சிவப்பட்டினம் ஜோதிலட்சுமி (52), அய்யம்பேட்டை பாமா (34), பள்ளித்தென்னல் பழனி (68), ஜெகநாதபுரம் சுப (37), அமுதா (18), பன்னக்குப்பம் முருகன் (39), செம்மேடு மங்கவரம் (40), கோலியனூர் ராஜாக்கண்ணு (43), அங்கநாயக்கன்பட்டி ராஜா (41), தூத்துக்குடி நித்யக்கல்யாணி (39), முத்துஹரினி (8), ரிசுதர்ஷன் ((10), எடப்பாளையம் மோகன்தாஸ் (47), சாலையம்பாளையம் புஷ்பா (32), தென்களவாய் விக்னேஷ்வரன் (28) உள்ளிட்ட 16 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து, வளவனூர் காவல்நிலைய போலீசார் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.