Tuesday, April 16, 2024
Home » விழுப்புரம் அருகே பரபரப்பு இரவோடு இரவாக ரயில்வே கேட் மூடல்

விழுப்புரம் அருகே பரபரப்பு இரவோடு இரவாக ரயில்வே கேட் மூடல்

by Ranjith

 

விழுப்புரம், மார்ச் 24: இரவோடு இரவாக ரயில்வே கேட்டை அதிகாரிகள் மூடியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த வழியாக கண்டமானடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும், அரசு மேல்நிலைபள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம்-நாகபட்டினம் இடையே நடந்து வரும் நான்குவழி சாலை பணியில், இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம், ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்படாது என அறிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரயில்வே கேட்டை மூடுவதற்காக அதிகாரிகள் இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து இறக்கினர். இதனை அறிந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இதை தொடர்ந்து நள்ளிரவில் இந்த ரயில்வே கேட் மூடப்பட்டதை காலையில் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜானகிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று காலை மீண்டும் பாலத்தின்கீழ் உள்ள நாகப்பட்டினம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே கேட் திறப்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் கொண்ட சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதன்மூலம் பேசி தீர்வு காணலாம் என கேட்டுகொண்டதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். தேர்தல் நேரம் என்று கூட பார்க்காமல் ஒன்றிய அரசு இந்த ரயில்வே கேட்டை மூடியதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

16 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi