விழுப்புரம், ஜூன் 17: விழுப்புரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விழுப்புரம் அருகே அயினம்பாளையம் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளது. இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 5 நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாம். இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் வயல்வெளி பகுதியில் உள்ள மோட்டருக்கு நீண்டதூரம் சென்று குடிநீரை பிடித்து வரும் நிலை இருந்தது. இதனிடையே நேற்று குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் செஞ்சி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவரும் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் குழாயை விரைந்து சீரமைத்து சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.