விழுப்புரம், ஜூன் 7: விழுப்புரத்தில் ரவுடியை கொன்றது ஏன் என்று கைதான நண்பர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். விழுப்புரம் அருகே பிடாகம் நத்தேமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(38). பிரபல ரவுடியான இவர் மீது, முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் கொலைவழக்கு, கொலைமுயற்சி உள்ளிட்ட 20 வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜானகிபுரம் பகுதிக்கு தனது நண்பர்கள் மதுஅருந்துவதற்காக அழைத்ததன்பேரில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது ஜானகிபுரம் சாலையில் வந்தபோது முகத்தில் மிளகாய்பொடியை தூவி 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது.
இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீசார் கொலைவழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லட்சுமணனின் நண்பர்களான அதேபகுதியைச் சேர்ந்த கலியன் மகன் சரவணன்(37), அய்யப்பன்(40), சக்திவேல்(29), இளையராஜா(24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு இளையராஜாவை போலீசார் கைதுசெய்தனர். அதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரவணன் உள்ளிட்ட 3 பேரையும் நேற்று கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஜானகிபுரம் பகுதியில் அடிக்கடி மதுஅருந்துவோம். அப்போது எங்களிடம் லட்சுமணன் காசுகேட்டு பிரச்னை செய்வார். சிறைக்கு சென்றுவிட்டு வரும்போது குடிக்க பணம் தேவையென்று அடித்து மிரட்டுவார். இதனால் அவர் மீது எங்களுக்கு பகை அதிகரித்தது. இந்நிலையில் சரவணன் என்பவர் அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனை லட்சுமணன் கைவிடுமாறு கண்டித்துள்ளார். மேலும், கள்ளக்காதலின் கணவருடன் சேர்ந்து சரவணனுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
கடந்த 4ம் தேதி இதுசம்மந்தமாக லட்சுமணன், சரவணனிடம் தகராறு செய்துவிட்டுச்சென்றார். பணம் கேட்டு பிரச்னை செய்வது, எங்கள் சொந்த பிரச்னையில் தலையிடுவதுமாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி, சம்பவத்தன்று காலை போன் செய்து பிரச்னையையெல்லாம் மறந்துவிடு. நாம் மதுஅருந்தலாம் என்று நைசாக பேசி அழைத்தோம். லட்சுமணனும் அழைத்துவுடன் வந்துவிட்டார். அப்போது தயாராக இருந்த நாங்கள் முதலில் மிளகாய்பொடியை தூவியதும் கீழேவிழுந்துவிட்டார். பின்னர் உருட்டுக்கட்டையால் அடித்து, அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சரவணன் உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.