விழுப்புரம், ஆக. 10: மகளிர் சுய உதவி குழுக்களிடம் பணத்தைக் திருப்பி கேட்டபோது சங்க தலைவியை சரமாரியாக தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சாலமடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி சுமதி(42). இவர் மகளிர் சுய உதவி குழு தலைவராக உள்ளார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி, மீனாட்சி, நாவம்மாள், ஜானகி உள்ளிட்டவர்கள் ரூ.30,000 பணம் மகளிர் சங்கத்தில் கடன் வாங்கியுள்ளனர். சங்கத்தில் எடுத்த பணத்தை திரும்ப கட்ட சொல்லி சுமதி கேட்டபோதும் அவர்கள் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனிடையே சசிகுமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் இவர்கள் வேலை செய்து வந்தபோது அங்கு சென்ற சுமதி மகளிர் சங்கத்தில் எடுத்த பணத்தை திருப்பி கட்டுமாறு கூறியுள்ளார். அப்போது சசிகுமார் எனது நிறுவனத்தில் வந்து எப்படி பணத்தை கேட்கலாம் என்று சுமதியிடம் கேட்டு அவரை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.