விழுப்புரம், ஜூன் 3: விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். விழுப்புரம் சென்னை சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார். அதிமுக முன்னாள் கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி கொண்டு தூங்கியுள்ளார். கோடை காலம் என்பதால் முதல் தளத்தில் உள்ள வீட்டை பூட்டி கொண்டு மாடியில் படுத்து தூங்குவது வழக்கமாம்.
அதன்படி நேற்று முன்தினம் குடும்பத்துடன் மாடிக்கு சென்று தூங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று முதல் தளத்தில் உள்ள வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், கீழே சென்றபோது பிரிட்ஜில் இருந்து தீ வெளியேறுவது தெரிய வந்தது. தீ வேகமாக பரவியதால் சமையல் அறை பகுதியில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதனால் செந்தில்குமார் தனது குடும்பத்துடன் அலறியடித்து வெளியே ஓடி வந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்த ஏசி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையிலான வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக செந்தில்குமார் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.