விழுப்புரம், அக். 20: விழுப்புரத்தில் சாலையோரம் பொதுக்கூட்ட மேடை போட்ட அதிமுகவினர், போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் அதிமுகவின் கட்சி ஆண்டு துவக்க விழாவையொட்டி புதிய பேருந்த நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக மேடை அமைக்கவும், கொடிக்கம்பங்கள் நடும் பணியிலும் நேற்று காலை ஈடுபட்டனர். இதனிடையே தாலுகா காவல் நிலைய போலீசார், பொதுக்கூட்ட மேடை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருப்பதால் உள்ளே தள்ளி போடுமாறு தெரிவித்துள்ளார். மேடை இங்கு அமைத்தால் பொதுமக்கள் சாலைகளில் நிற்கக்கூடும்.
போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என கூறினர். போலீசாரின் இந்த அறிவுரையை ஏற்கமறுத்த நிர்வாகிகள் மேடை இங்குதான் அமைப்போம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றுகூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் மேடையை அகற்ற சொன்னதால் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து டிஎஸ்பி சுரேஷ் பேச்சு நடத்தியதில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் கூட்டத்தை நடத்துவதாக அதிமுகவினர் தெரிவித்ததால் போலீசார் ஒப்புக்கொண்டு சென்றனர்.