பெரம்பலூர்: வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் போது அதை வைத்து அளவான, அழகான, எளி மையான வாழ்க்கையை மகிழ்வோடு வாழ முடியும். அதையும் தாண்டி ஆடம்பர தேவைகளுக்காக பிறருக்கு நியாயமாக செய்ய வேண்டிய செயல்களுக்கு லஞ்சம் பெறுவது பிச்சை பெறுவதற்குச் சமம் என்று விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசினார். பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சார்பில், ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், பெரம்பலூர் நகரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ‘ஊழலை மறுப் போம், தேசத்தைக் காப்போம்” என்ற பொருண்மையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஊழல் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும், மாணவர்களிடம் நடத்துவது மிகவும் சிறப்பானதாகும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் வலிமை கொண்டவர்களாக விளங்கும் மாணவ, மாணவிகளாகிய நீங்கள் லஞ்சம் வாங்குவது குற்றம் என்பதை உணர்ந்தவர்களாக, மற்றவர்களுக்கும் உணர்த்துபவர்களாக இருக்க வேண்டும்.