அசத்தும் நம் சந்தைவிவசாயத்தில் முக்கிய பிரச்னையே விளைவித்தவன் விலையை நிர்ணயிக்க முடிவதில்லை என்பதுதான். விவசாயத்தில் அதிக லாபத்தை இடைத்தரகர்கள்தான் தன்வசமாக்குகின்றனர். அதனால் ஒரு நஷ்டம் சார்ந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது விவசாயம். சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்பவர்களே நஷ்டத்தில் உழலும்போது, விவசாயக் கூலிகளின் நிலையோ இன்னும் மோசம். இந்நிலையில் விளைவித்தவனே விலையை நிர்ணயிப்பான் என்ற நோக்கத்துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் நம் சந்தை. தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து நம் சந்தையின் மூலம் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தச் சந்தை எப்படி செயல்பட்டு வருகிறது என்பது குறித்து இதன் இயக்குனர் சண்முகநாதனிடம் பேசினோம். ‘‘நான் எட்டு விதமான தொழில்களைச் செய்திருக்கிறேன். எதிலும் மன நிம்மதி கிடைக்காமல்தான் விவசாயம் செய்ய வந்தேன். ஆரம்பத்தில் என்னுடைய நிலத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்தேன். ஆனால், நல்லபடியாக விவசாயம் போகவில்லை. விவசாயம் குறித்த தேடல் அதிகமானது. நம்மாழ்வார் குறித்துக் கேள்விப்பட்டேன். நம்மாழ்வாரைப் பற்றி படிக்கப் படிக்க அவர் மீதான ஈர்ப்பு அதிகமானது. அவருடைய ‘வானகத்’துக்குச் சென்று இயற்கை விவசாயம் செய்வது குறித்த பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன். ஒரு நம்பிக்கை வந்தது. என்னுடைய நிலத்தில் இயற்கை முறையில் கீரைகளை விதைத்தேன். நன்றாக கீரைகள் விளைந்ததும் ஊர் ஊராகக் கொண்டுபோய் விற்பனை செய்தேன். இயற்கையாக விளைந்த கீரைகள் என்பதால் மக்களும் ஆர்வமாக வாங்கினார்கள். எனக்கு பூச்சிக்கீரை என்ற பட்டப்பெயரே கிடைத்தது…’’ என்ற சண்முகநாதனின் சொந்த ஊர் கோத்தகிரி. ‘‘நான் செய்த இயற்கை விவசாயத்தைப் பார்த்த சிலருக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஈர்ப்பு உண்டானது. அவர்கள் என்னிடம் பயிற்சி கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். அப்படி ஏழு வருடங்களுக்கு முன்பு நான் பயிற்சி கொடுத்த 20 பேருடன் சேர்ந்து ஆரம்பித்ததுதான் நம் சந்தை. நிலமில்லாத, நில உரிமையில்லாத விவசாயிகளை ஒன்று சேர்த்து அவர்களுடைய பொருட்களை வாங்கி விற்பதும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதும்தான் நம் சந்தையின் முக்கிய நோக்கம். பொதுவாகவே மலையில் வாழும் பெரும்பான்மையானவர்களுக்கு நிலமில்லை. தவிர, இலங்கையிலிருந்து வந்து தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கும் சொந்தமாக நிலமில்லை. சிலர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். இதுபோக பன்னெடுங்காலமாக காடுகளில் விவசாயம் செய்துவரும் பழங்குடிகளுக்கும் சொந்தமாக நிலமில்லை. இப்படியான நில உரிமை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் நம் சந்தை…’’ என்ற சண்முகநாதன், நம் சந்தை குறித்து மேலும் விவரித்தார். ‘‘ஆரம்பத்தில் முறையாக பதிவு செய்யாமல், முழுக்க விவசாயிகளால் இயக்கப்பட்டு வந்தது நம் சந்தை. இயற்கை விவசாயத்தை முறையாக மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் விளைவிக்கிற பொருட்களை வாங்கி, விற்பனை செய்வதுதான் நம் சந்தையின் திட்டம். இதில் விவசாயிகள்தான் விலையை நிர்ணயம் செய்து பொருட்களை நம் சந்தைக்குக் கொடுப்பார்கள். அதை மக்களிடம் நியாயமான விலைக்கு நம் சந்தை விற்கும். இந்த ஐடியா எல்லாம் சரி. ஆனால், சந்தையை செயல்படுத்த எங்களிடம் பணம் இல்லை. ஆம்; விவசாயிகளிடம் பொருட்களை வாங்க பணம் இல்லை. இதைப்பற்றி பெங்களூருவில் உள்ள ஒரு நண்பரிடம் சொன்னேன். ‘‘பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உன்னால் பொருட்களை அனுப்ப முடியுமா..?’’ என்று நண்பர் கேட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். ‘‘முதலில் ஆர்டர் எடுத்து முன்பணம் வாங்கிக்கொள். அந்தப் பணத்தை வைத்து விவசாயிகளிடம் பொருட்களை வாங்கிக்கலாம்…’’ என்று ஒரு யோசனையையும் சொன்னார் நண்பர். இந்த யோசனை சரியாகப்பட்டது. உடனே பெங்களூருவுக்குக் கிளம்பினேன். நண்பர் சொன்ன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 60 வீடுகளுக்கும் சென்றேன். வீட்டில் வசித்து வந்தவர்களிடம் எங்களுடைய சந்தையைப் பற்றியும், இயற்கையாக விளைவிக்கக் கூடிய பொருட்கள் பற்றியும் சொல்லி ஆர்டர் எடுத்தோம். பலபேர் ஆர்டர் கொடுத்து, முன் பணமும் தந்தனர். அந்தப் பணத்தை முதலீடாக வைத்து விவசாயிகளிடம் பொருட்களை வாங்கினோம்…’’ என்று நம் சந்தை ஆரம்பித்த கதையைப் பகிர்ந்தார் சண்முகநாதன். ‘‘மலைப்பிரதேசம் என்பதால் அதிகமாக காய்கறிகள்தான் இங்கு விளையும். அதை விவசாயிகளிடம் வாங்கி பெங்களூருவு க்கு அனுப்பி வைப்போம். சில நாட்களில் இயற்கை விவசாயத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. இங்கே ஓடும் ஓடைகளில் வரும் தண்ணீரைத்தான் அனைத்து விவசாயிகளும் பயன்படுத்துகின்றனர். நாங்கள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தாவிட்டாலும், அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளும் இந்த தண்ணீரைத்தான் பயன்படுத்துகின்றனர். அதனால் இயற்கை விவசாயம் செய்பவர்களும் இந்த ரசாயன உரங்கள் கலந்த தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற நிலை. இதுதான் இங்கிருக்கும் மிகப்பெரிய சிக்கல். மட்டுமல்ல, இயற்கை விவசாயம் செய்வதற்கு முன்பு நிலத்தை அதற்கேற்றாற்போல மாற்ற வேண்டும். இதற்கு ஒரு வருடமாவது தேவைப்படும். அதுவரை ஆகும் செலவுகள் அனைத்தையும் நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகளே சமாளிக்க வேண்டும். யாருக்கும் சொந்தமாக நிலம் இல்லாததால், இயற்கை விவசாயத்துக்குத் தகுந்த மாதிரி நிலத்தை பண்படுத்தும் திட்டத்துக்கு யாருமே முன்வரவில்லை. அதனால் காய்கறிகள் விற்பனையைக் குறைத்துவிட்டு வன மகசூல் முறையைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம்…’’ என்ற சண்முகநாதன் சிறு வன மகசூல் குறித்தும் பேசினார். ‘‘காடுகளில் இயற்கையாக விளைந்து கிடைக்கும் பொருட்களான தேன், கடுக்காய், சிறுமிளகு, தான்றிக்காய், இலவம்பஞ்சு, நெல்லிக்காய், அவரை, மொச்சை சீயக்காய், அத்திக்காய், மாங்காய், கிராம்பு, மஞ்சள் என 23 வகையான பொருட்கள் சிறு வன மகசூல் பட்டியலில் வரும். அவற்றை பழங்குடி மக்கள் எடுத்துக்கொண்டு வருவார்கள். அவற்றை விற்பனை செய்யலாம். மக்களுக்கும் முடிந்த அளவு இயற்கையாக விளையும் பொருட்களைக் கொடுக்க முடியும் என்பதால் இதைச் செய்ய ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே ஆதரவும் கிடைத்தது. நம் சந்தையைப் பற்றி மக்களுக்கும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. அரசு எங்களின் வேலைகளை பார்த்து தானாக முன்வந்து நம் சந்தையை ஒரு சொசைட்டியாக பதிவு செய்தது. இப்போது அரசுடன் சேர்ந்து விற்பனை செய்து வருகிறது நம் சந்தை. ஆரம்பத்தில் நம் சந்தையில் 100 பேர் தான் இருந்தனர். தற்போது 500 குடும்பங்கள் என மொத்தம் 62 ஊர் மக்கள் பதிவு செய்து பொருட்களை விற்று வருகின்றனர். இயற்கையாக காய்கறிகளை விளைவிக்கவும் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். கூடிய விரைவில் அதனையும் செயல்படுத்துவோம். பொதுவாகவே விவசாயம் ஒரு கூட்டு வேலை. அதேபோல விவசாயிகள் ஒன்றுசேர்ந்து விற்றால் தான் தங்களுக்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியும்…’’ என்று அழுத்தமாக முடித்தார் சண்முகநாதன்.தொடர்புக்கு: சண்முகநாதன்- 99944 63351தொகுப்பு: மா.வினோத்குமார்…