தர்மபுரி, ஆக.26: தர்மபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாளாக 25ம்தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது அதிக அளவிலான போட்டியாளர்கள் பங்கேற்க ஏதுவாக முன்பதிவு செய்ய வரும் 2ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுநாள் வரை போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்யாத பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் 15 வயது முதல் 35 வயதுடைய பொதுமக்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு ₹3000ம், 2ம் இடம் பெறுபவர்களுக்கு ₹2000ம், 3ம் இடம் பெறுபவர்களுக்கு ₹1000ம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ₹1 லட்சமும், 2ம் பரிசாக ₹75 ஆயிரமும், 3ம் பரிசாக ₹50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ₹75 ஆயிரமும், 2ம் பரிசாக தலா ₹50 ஆயிரமும், 3ம் பரிசாக ₹25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மொத்த பரிசுத்தொகை ₹37 கோடி ஆகும். மேலும் “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.