திங்கள்சந்தை, ஆக. 14: வில்லுக்குறி அருகே தம்பியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட வாலிபரை வீடு புகுந்து வெட்டிய தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர். வில்லுக்குறி அருகே கரிஞ்சான்கோடு தோப்புவிளையை சேர்ந்தவர் காட்வின் தாஸ் (24). கட்டிட தொழிலாளி. இவரது தம்பி உறவு முறையான சிறுவன் ஒருவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஒரு பள்ளியில் படித்து வருகிறான். அந்த சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 9ம்தேதி அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஆலயம் அருகில் வைத்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதை காட்வின் தாஸ் தட்டி கேட்டு இருக்கிறார். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே அன்று இரவு ராகுல், அவரது தந்தை செல்வமணி ஆகியோர் காட்வின் தாஸ் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
இந்த நேரத்தில் ராகுல் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து காட்வின் தாஸை வெட்டியதாக தெரிகிறது. இதில் காட்வின் தாஸ் தலையில் வெட்டு விழுந்து உள்ளது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். செல்வமணி கல்லை எடுத்து காட்வின் தாஸ் மீது எறிந்து உள்ளார். ஆனால் கல் அவர் மீது படாமல் டியூசன் சென்று விட்டு வந்த ஒரு மாணவன் காலில் பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. தற்போது காட்வின் தாஸ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ராகுல், செல்வமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.