புதுச்சேரி, ஆக. 21: ஆன்லைன் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி வில்லியனூர் நபரிடம் ரூ.1 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனூரை சேர்ந்த குமார் என்பவரை தெரியாத நபர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவரும் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்து அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்துள்ளார். அதன் பிறகு, சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமல் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
லாஸ்பேட்டையை சேர்ந்த அருள்மொழி என்பவருக்கு தெரியாத எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதனை `ஆன்’ செய்து பேசியபோது, தெரியாத பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் நின்று சிறிது நேரம் பேசியுள்ளார். அந்த வீடியோ அழைப்பை ஸ்கிரீன் ரெக்கார்டு மூலம் பதிவு செய்து கொண்டு உடனே இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு, ரெக்கார்டு செய்யப்பட்ட வீடியோவை அந்த பெண் அருள்மொழிக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதேபோல், புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் இன்ஸ்டாகிராமில் ேவலைவாய்ப்பு தொடர்பான ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். பிறகு, அந்த விளம்பரத்தில் உள்ள லிங்க் மூலம் தனது சகோதரிக்கு ேவலை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்காக செயலாக்க கட்டணமாக ரூ.2,700 செலுத்தியுள்ளார். அதன்பிறகு, எந்த பதிலும் வராமல் ஏமாந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.