வில்லியனூர், ஜூன் 6: வில்லியனூர் அருகே அதிகாலையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் அருகே உள்ள அகரம், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (29). கூலிவேலை செய்து வருகிறார். இவரது கணவர் சக்திகுமார் தனியார் கம்பெனியில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்துடன் தூங்க சென்றனர். கோடைக்காலம் என்பதால் கணவர் சக்திகுமார் வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். இதனால் பரமேஸ்வரி, வீட்டின் கதவை தாழ்ப்பால் போடாமல் பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே தூங்கியுள்ளார்.
அதிகாலை 2.30 மணியளவில் பரமேஸ்வரியின் பக்கத்தில் யாரோ படுத்துக்கொண்டு கையையும், தோல்பட்டையையும் பிடிப்பது போல் இருந்ததை அறிந்து எழுந்து பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (38) என்பவர் நின்றுகொண்டு இருந்தார். அவர் கூச்சலிட்டதின் பேரில் கணவர் சக்திகுமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பரமேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு கோவிந்தன் எஸ்கேப் ஆகிவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் கூறியபோது சிறிது நேரத்துக்கு முன்னர் தான் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை கையை பிடித்து இழுத்தான் என்று அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.