ஈரோடு, மே 26: வில்லரசம்பட்டி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளத்தில் குப்பை, கோழி இறைச்சி கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி அருகேயுள்ள இந்திரா நகரில் வருவாய்த்துறைக்கு சொந்தமான பள்ளம் உள்ளது. மழைக்காலங்களில் இப்பள்ளத்தில் தேங்கும் மழை நீர், அப்பகுதியில் நிலத்தடி நீராதரமாக உள்ளது. குறிப்பாக, இந்திரா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போர்வெல்கள், விளைநிலங்கள் பயனடைந்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனியாரின் கட்டுமான கழிவுகள், குப்பை, கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவக்கழிவுகள் உள்ளிட்டவைகள் கடந்த சில மாதங்களாக பள்ளத்தில் கொட்டி வருகின்றனர். இதனால், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தனியாரின் கட்டுமான கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று இந்திரா நகர் பள்ளத்திற்கு வந்தது. அப்போது, அப்பகுதி மக்கள் கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தியதோடு, டிராக்டரை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த வில்லரசம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலு, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசர், பொறியாளர் நடராஜன், 10வது வார்டு கவுன்சிலர் குமரவேல் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, டிராக்டர் உரிமையாளர் பூபதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, இனிமேல் பள்ளத்தில் குப்பையை கொட்டக்கூடாது என எச்சரித்தனர். இதற்கிடையே, இந்திரா நகர் பள்ளத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில், அதனைச் சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.