வலங்கைமான், மே 30: வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்ற நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் முற்றிலும் பழுதடைந்ததை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதனை அடுத்து விருப்பாச்சிபுரம் ஊராட்சிக்கு புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் வர உள்ளது.