விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை அமைந்துள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிளைச் சிறையில் உள்ள சில குறைபாடுகள் மற்றும் கோரிக்கை காரணமாக மத்திய சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் நேற்று திடீரென கடலூர் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறைச்சாலைக்கு சென்ற அவர், அங்கு பராமரிக்கப்படும் கைதிகளின் பதிவேடுகள் மற்றும் உணவு, சுகாதாரம், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கிளை சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.