விருத்தாசலம், மே 18: விருத்தாசலத்தில் 2 வீடுகளில் 16 பவுன், ரூ.80 ஆயிரம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயவேல் மகன் திருவாசகம் (39). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருவாசகம் பெரம்பலூர் மாவட்டம், கல்லை பகுதியில் உள்ள உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதியினர் திருவாசகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த திருவாசகம் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் மேற்கூறையில் இருந்த ஓடுகள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி வெளியே கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை செய்ததில் திருவாசகம் கடந்த ஏப்ரல் 15ந்தேதி மகன்களுக்கு காதணி விழா நடத்தி அதன் மூலம் சீர்வரிசையாக கிடைத்த பணத்தில் வங்கியில் அடமானத்தில் இருந்து மீட்ட தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை வீட்டில் வைத்திருந்ததும், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது.
இதேபோல் மணலூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மனைவி வசந்தா(32). ராமச்சந்திரன் பேட்டையில் ரோட்டோரத்தில் சிக்கன் பக்கோடா கடை போட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நேற்று காலை எழுந்து கீழே வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகை திருடு போயிருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.