விருதுநகர், நவ. 7: விருதுநகர் அருகே சின்ன மருளுத்து கிராமத்தில் நேற்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கு 4வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நவ.6 முதல் நவ.26 வரை நடைபெற உள்ளது. வைரஸ் கிருமியால் பரவும் கோமாரி நோய் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவும். கால்நடை உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி திறன் அதிக பாதிப்பு ஏற்படும்.
கால், வாய் காணை நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தில் 1.79 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் முன் அறிவிப்போடு நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசியை விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு போட்டு பயன்பெற வேண்டும் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்சியில் கால்நடை இணை இயக்குநர், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.