விருதுநகர், ஜூலை 4: விருதுநகர் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் நூலகத்தை பார்வையிட்டு நூலகத்திற்கு வரும் வாசகர்களின் விபரம், நூல்கள் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இ.சேவை மையம், ஆதார் மையம், முதலமைச்சர் காப்பீட்டு அலுவலகங்களை நேரில் பார்வையிட்டு சேவை பெற வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். சூலக்கரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி ஊக்கப்படுத்தி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அலுவலக செயல்பாடுகள், வழிகாட்டி கையேடுகள், மாதிரி வினாத்தாள்களை ஆய்வு செய்தார்.