விருதுநகர், செப். 3: விருதுநகரில் கடந்த சில மாதங்களாகவே அக்னி வெயிலைப் போல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த ஆக.20, 29, 31ம் தேதிகளில் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் தொடர் கனமழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இந்நிலையில் நேற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை தொடர் மழையும், அதை தொடர்ந்து விட்டு, விட்டு சாரல் மழையும் பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளான பழைய பஸ் நிலையம், புல்லலாக்கோட்டை ரோடு, சாத்தூர் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, வீரபுத்திரன் தெரு, காந்திபுரம் தெரு, அக்ரஹாரம் தெரு, தர்காஸ் தெரு, மொன்னி தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது.