விருதுநகர், ஜூன் 30: விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநாட்டின் கோரிக்கை விளக்கம் தொடர்பான பிரசார இயக்கம் நடைபெற்றது. விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகின்ற ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி நேற்று விருதுநகர் முக்கிய வீதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சக்கணன், நகரச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், விருதுநகர் ரயில்வே நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், சென்னை-நெல்லை நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லவும், விருதுநகர் கௌசிகா நதியில் சாக்கடை நீர் கலைப்பதை தடுத்து இரு புறங்களிலும் நடைமேடை அமைத்து சுற்றுலா தலங்களாக உயர்த்திடவும், தலைமை மருத்துவமனையில் அனைத்து உயிர்காக்கும் கருவிகள், மருத்துவர்கள் செவிலியர்கள் அதிக அளவில் நியமிக்க வேண்டும், ஜவுளி பூங்கா பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் உள்ளிட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை பொதுமக்களிடத்தில் விளக்கிப் பேசினர். இதில், மாவட்ட குழு உறுப்பினர் மாரீஸ்வரி முருகேசனன், ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.