விராலிமலை,நவ.21: விராலிமலை மலைக்கோயில் செல்லும் தார்ச் சாலை பாதை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி உருவத்திலான மண் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் மலைக்கோயில் உள்ளது. இந்த மலைக்கோயிலின் மேலே செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. 207 படிகள் மூலம் செல்லும் பாதை ஒன்றும், சறுக்கு வடிவிலான யானை அடி பாதை என ஒன்றும், பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல அகலமான தார் சாலை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தார்ச் சாலை ஓரங்களில் முருகன், வள்ளி, தெய்வானை, நாரதர், மீனாட்சி, முனிவர்கள், மயில்,சிவன் உள்ளிட்ட சுவாமிகள் உருவத்திலான பல்வேறு மண் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர் அச்சிலைகளை ரசித்தபடியே செல்வர்.
சிலர் அருகே சென்று வணங்கி செல்வர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சிலைகளை அடித்து, உடைத்து சென்றுள்ளனர்.இதனால் பல சிலைகள் சேதமடைந்துள்ளன. இது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இக்கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பாதை ஓரங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.