விராலிமலை, ஜூன் 7: விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.அய்யப்பன் ஊக்கத்தொகை வழங்கி மாணவிகளை உற்சாகப்படுத்தினார். விராலிமலை-இனாம்குளத்தூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1063 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்விப்பணியில் 33 ஆசிரியைகள் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த மே 31ம் தேதி 3 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தற்போது 30 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
கல்வியுடன் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தனித்திறனில் சிறந்து விளங்கும் இப்பள்ளிக்கு கல்வி வளர்ப்பு தொடர்பான பல்வேறு உதவிகளை பொதுநல அமைப்பினர் செய்து வருகின்றனர். அந்த வகையில் விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.அய்யப்பன் நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவிகளுக்கு தலா 3 ஆயிரம், 2 ஆயிரம், ஆயிரம்என முறையே வழங்கினார். அதே போல் 11ம் வகுப்பு மாணவிகள் மூன்று பேருக்கு தலா 500 ரூபாய் முறையே வழங்கப்பட்டது. இதே போல் கல்வியாளர் பாலகிருஷ்ணன் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரூ.6,700 ஐ முறையே பகிர்ந்தளித்தார்.
விழாவில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன், விராலிமலை மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன், தலைமை ஆசிரியர் ரோஜா வினோதினி, திமுக மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் குமார், கல்வியாளர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ரெசினா, தேவகி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.