விராலிமலை, ஆக. 31: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 6.5 செ.மீ., மழை பெய்தது. மணப்பாறை சாலையில் மரம் விழுந்ததால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. மணப்பாறை சாலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. விராலிமலை – மணப்பாறை சாலையில் செவனம்பட்டி அருகே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் அங்கு வந்து மழையையும் பொருட்படுத்தாமல் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 11 மணியை கடந்தும் பெய்து கொண்டிருந்தது. ஒரே நாள் இரவில் 6.5 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது. இந்த மழையால் தனியார் தொலை ெதாடர்பு இணையதள சேவை முடங்கியது. மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.,): ஆதனக்கோட்டையில் 22, பெருங்கலூரில் 30, புதுக்கோட்டை 5.2, ஆலங்குடி 42, கந்தர்வகோட்டை 21.50, மலையூர் 32.40 மி.மீ., மழை பெய்தது.