விராலிமலை, மே 25: சனி மஹா பிரதோஷ விழாவை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விராலிமலை மலை கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்தது. சனியின் பார்வையால் நிகழும் கெடுபலன்கள் நீங்க பிரதோஷ வழிபாடு மிகவும் சிறந்தது. சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட்டால் சனி தோஷங்கள் முற்றிலும் நீங்கும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி பகவான் தன் அருட்பார்வையை காட்டி அருள்வார் என்று ஐதீகத்தின் மேல் ஈடுபாடு உள்ளவர்கள் நம்பிக்கையாகும்.
அதேபோல், நேற்று விராலிமலை முருகன் மலைகோயிலில் உள்ள சிவன் கோயில், வன்னிமரம் சிவன் கோயில்களில் சிறப்பு பெற்ற சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனி பிரதோஷ வழிபாடு நடத்தினர். இதே போல் விராலூர், இலுப்பூர், அன்னவாசல் பகுதி சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தை ஒட்டி சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகளும் நடைபெற்றது.