விராலிமலை, ஆக. 31: விராலிமலை அருகே பழைய பொருட்கள் வாங்கி, விற்கும் வியாபாரியிடம் மர்ம நபர்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, கருமண்டபத்தை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் (50). இவர் பல்வேறு ஊர்களுக்கு ஆட்டோவில் சென்று பழைய பொருட்களை வாங்கி, அதை மொத்தமாக விற்று வரும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பழைய பொருட்கள் வாங்குவதற்காக, விராலிமலை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே உள்ள மேலபச்சக்குடி எனும் இடத்துக்கு வந்தார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் முஜிபூர் ரகுமானிடம் சென்று, தங்களிடம் பழைய பேட்டரி இருப்பதாகவும், அதை வந்து வாங்கிக் கொள்ளுமாறும் அவரை அழைத்து சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், முஜிபுர் ரகுமானை மிரட்டி, அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து முஜிபுர் ரகுமான், விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.