விராலிமலை, மே 25: விராலிமலை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து, ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். விராலிமலை அடுத்துள்ள ராஜாளிப்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ராஜாளிப்பட்டி பொது இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதைக் கண்டறிந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மணப்பாறை ஆனந்தி நகரை சேர்ந்த இருளப்பன்(49), திருவள்ளுவர் நகர் ஜீவா(38), அண்ணாவி நகர் ஹுசைன் (34), செவலூரை சேர்ந்த செல்வராஜ் (27), கொடும்பாளூரை சேர்ந்த அண்ணாதுரை (60), முசிறியை சேர்ந்த மதியழகன்(36), திருச்சியை சேர்ந்த கண்ணன்(55), சோமரசம்பேட்டையை சேர்ந்த உஸ்மான் அலி(32), தாயனூரை சேர்ந்த சுப்பிரமணியன் (50), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த செந்தில்குமார்(45) ஆகிய பத்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரொக்கம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 960, 5 மோட்டார் சைக்கிள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.