விராலிமலை,ஆக.7: விராலிமலை அருகே திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண விராலிமலை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஊர் பொதுமக்கள் நாளை (8ம்தேதி) எழுத்துபூர்வாக தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. விராலிமலை அருகே நம்பம்பட்டியில் கருங்குழி கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு நம்பம்பட்டியில் உள்ள 3 தரப்பினருக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டால் திருவிழா நடைபெறமால் தடைபட்டது.
அதேபோல் இந்த வருடமும் திருவிழா நடத்துவதில் கருத்து வேறுபாடு நிலவி வந்ததையடுத்து ஒரு தரப்பினர் கடந்த 4ம்தேதி கருங்குழி கருப்பசாமி கோயிலுக்குள் குதிரை சிலை மற்றும் பரிவார தெய்வங்கள் சிலை செய்து வைத்து பூஜை செய்து ஆடி மாத வழிபாட்டை தொடர முயன்றனர். அப்போது ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தி கோயிலுக்குள் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று சிலையை வைத்து கொள்ளுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சிலைகளை வைக்க அவர்களும் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் விராலிமலை-மணப்பாறை சாலையில் அமர்ந்து பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை (நேற்று முன்தினம்) விராலிமலை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதனைதொடர்ந்து அனைவரும் பஸ் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி தலைமையில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அனிதா, இலுப்பூர் டிஎஸ்பி காயத்திரி முன்னிலையில் 3 தரப்பினரையும் வைத்து அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைத்துறை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் பிரச்சனைக்குரியவர்களை தவிர்த்து திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் சார்பில் பேசி முடிவு செய்து விவரத்தினை எழுத்துபூர்வமாக வரும் 8ம் தேதி தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.