விராலிமலை,ஆக.7: விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் சார்பாக அட்மா திட்டத்தின் மூலம் சூரியகாந்தி பயிரில் களை கட்டுப்பாடு மேலாண்மை விவசாயிகள் பயிற்சி கசவனூரில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாமிக்கண்ணு வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர் எஸ். ஜெயபாலன் (பயிற்சி நிலையம் குடுமியான்மலை) தலைமை வகித்து பேசினார். இதில், சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், பருவம் மற்றும் ரகங்கள் பற்றியும் களை கட்டுப்பாட்டு மேலாண்மை முறைகள் பற்றியும் விளக்கி கூறினார். விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன், வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றியும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கி கூறினார்.
தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் முகமது ரபிக், மண் வளத்தை மேம்படுத்தி பயிர் சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்தல் பற்றியும் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்றவாறு தேவையான அளவு உரமிடுதல் பற்றியும் மற்றும் ரசாயன உரம் பயன்பாட்டை குறைத்து இயற்கை முறையில் சாகுபடி செய்தல் பற்றியும் விளக்கி கூறினார். மேலாண்மை அலுவலர் செல்வி ஷீலா ராணி: தற்போது வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடுபொருள்கள் பற்றியும் சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும் உழவன் செயலி பற்றியும் விளக்கி கூறினார்.
உதவி வேளாண்மை மு.ராஜா: நுண்ணீர் பாசன திட்டம் பற்றியும் அதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும் விளக்கி கூறினார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி செய்திருந்தார்.