விராலிமலை, செப்.21:விராலிமலை கிளை நூலகம் சார்பில் ஆரி வேலைப்பாடுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. இப்பயிற்சி வரும் 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆரி வேலைப்பாடுகள் கொண்ட உடைகளை பல பெண்கள் தற்போது விரும்பி அணிந்து வருகின்றனர். விதவிதமான வேலைப்பாடுகளில், பார்த்தவுடன் பிடித்து விடும் வகையில் உருவாக்கப்படும் ஆரி வேலைப்பாடு ஆடைகளின், நிறங்கள் முதல் அதில் பதிக்கப்பட்ட கற்கள், நூல் வரை நுணுக்கமான வேலைப்பாடுகளாகும்.
ஆரி வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடைகள் என்பது பல வருடங்களாகவே பெண்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருக்கக்கூடியது. இது பலரால் விரும்பி அணியப்படுகிறது. ஆரி வொர்க் பல வகை உண்டு. அதில் பெரும்பாலோனோர் விருப்பம், மகம் ஒர்க், ஸ்டோன் ஒர்க், பாசி ஒர்க் போன்றவை. ஆரி வேலைபாடுகளை பொருத்தவரை கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே குடும்பத்தலைவிகள் இதை செய்வதால் தற்போது இத்தொழில் மீது பெண்களின் கவனம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் விராலிமலை கிளை நூலகத்தை கவனப்படுத்தும் விதமாகவும், வீட்டில் இருந்தபடியே பெண்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்திலும்,விராலிமலை கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டு விராலிமலை கலைஞர் சமுதாய கூடத்தில் இப்பயிற்சி வகுப்பு வரும் 15 நாட்கள் நடைபெறுகிறது.
மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என மொத்தம் 30 மணி நேரம் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பயிற்சியாளர்களாக அன்னலட்சுமி, பூங்கொடி செயல்படுகின்றனர்.முதல் நாள் வகுப்பை அட்மா சேர்மன் இளங்குமரன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை விராலிமலை கிளை நூலகர் ஜெயராஜ் செய்து வருகிறார்.