Wednesday, September 11, 2024
Home » விரல்களை கண்களாக மாற்றியவர்!

விரல்களை கண்களாக மாற்றியவர்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4-ம் தேதியன்று அவர் நினைவாக சர்வதேச பிரெய்லி தினம் அனுசரிக்கப்படுகிறது. பார்வையற்றோரின் விரல்களைக் கண்களாக மாற்றியமைத்த இந்த எழுத்து முறை லட்சக்கணக்கானோருக்கு இன்று ஞானப்பார்வை அளித்துக் கொண்டிருக்கிறது. பிரெய்லியின் வாழ்க்கை வரலாறு அவரைப் போன்று கண் பார்வை இழந்தோருக்கு தன்னம்பிக்கையூட்டுவதாக உள்ளது. ;லூயிஸ் பிரெய்லி பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1809 ஜனவரி 4-ம் நாள் பிறந்தார். இவரது தந்தை குதிரை லாடம், சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். 3-வது குழந்தையான லூயிஸ், ஒரு நாள் தந்தையின் பணிமனையில் ஊசியை வைத்து விளையாடியபோது அது கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டது. காயத்திற்கு முறையான சிகிச்சை பெறாததால் அந்தக் கண்ணில் பார்வை பறிபோனது. பின்னர் அவருக்கு ஏற்பட்ட கண் நோயால் அவருடைய இன்னொரு கண்ணிலும் பார்வையை இழந்தார். 8 வயது முழுமை அடைவதற்குள் இரண்டு கண்களிலும் முழுவதும் பார்வை பறிபோனது. பார்வை பறிபோனாலும் உலகத்தோடு போராடி ஜெயிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் அவர் மனதில் இருந்தது. பிரான்சின் பிரபல பாதிரியாரான வேலண்டெய்ன் இவருக்கு பல உதவிகள் புரிந்தார். அவருடைய உதவியால் தனது 10-வது வயதில் Royal Institute for Blind Youth என்கிற பார்வையற்றோருக்கான கல்வி நிறுவனத்தில் லூயிஸ் சேர்ந்தார். அவருக்கு கண் பார்வை பறிபோன பிறகு தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் கேட்டு, தொட்டு, முகர்ந்து பார்த்து உணர்ந்து அவை பற்றி அறிந்து கொண்டார்.பார்வை இல்லாதவர்களுக்கான உலகின் ஒரே பள்ளி இதுவாகும். அங்கு எழுத்துகளை விரலால் தொட்டு உணர்வதற்கு ஏற்ப அவற்றை மேடாக்கிப் புத்தகங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கல்வி புகட்டப்பட்டு வந்தது. மொழிகள், இலக்கணம், இசை, கணிதம், கைத்தொழில் பயிற்சி அனைத்தும் இந்த முறையிலேயே கற்பிக்கப்பட்டன. படிப்பது, இசை கற்பது, கணக்குப் போட்டு பார்ப்பது, கைத்தொழில் கற்பது என புதிய அனுபவங்களில் உற்சாகமாக மூழ்கினார். இவருடைய படிப்புக்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தார் அவரது தந்தை. பள்ளி நூலகத்தில் இருந்த நூல்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்கிற தணியாத ஆசை அவருக்கு இருந்தது. ஆனால், புத்தக வடிவில்தான் அவருக்கு பிரச்னை காத்திருந்தது. ஒரு பக்கத்திற்கு ஒரு வார்த்தை அல்லது இரு வார்த்தைகள்தான் இருக்கும். 10,20; பக்கங்கள் சேர்ந்தாலே புத்தகம் ஒரு பெரிய பெட்டி அளவிற்குத் தடிமனாக இருக்கும். அதாவது புத்தகத்தின் மீது அனைத்து எழுத்துகளும் தடவிப் பார்த்து உணரும் விதத்தில் மேடாக உருவாக்கப்பட்டிருக்கும். எப்படி எல்லா நூல்களையும் படித்து முடிப்பது என்று அவருக்கு அப்போது புரியவில்லை. போர்க்களத்தில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக நைட் ரைட்டிங் என்ற முறையை சார்லஸ் பார்பியர் என்ற ராணுவத் தளபதி உருவாக்கி இருந்தார். ஒருநாள் இதுபற்றி விளக்க லூயிஸின் பள்ளிக்கு அந்த ராணுவ தளபதி வந்தார். அவர் உருவாக்கி இருந்த எழுத்துமுறை 12 புள்ளிகளை அடிப்படையாகக்; கொண்டிருந்தது. மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர இந்த முறை பின்பற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த அளவுக்கு சிரமம் இல்லை என்றாலும், இதிலும் சற்று சிரமப்பட்டும் மெதுவாகவும்தான் படிக்க முடிந்தது. எனவே, இதற்கு மாற்றாக எளிதாகவும், வேகமாகவும் பயில ஒரு புதிய எழுத்து முறையை உருவாக்க உறுதியேற்றார் லூயிஸ்.இரவும் பகலும் பாடுபட்டு ஆராய்ச்சியில் இறங்கினார். புள்ளிகளைப் பல விதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, ஒரு புதிய குறியீட்டு மொழியை அவர் உருவாக்கினார். வெறும் ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த மொழியில் பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை,; கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம் என்பதை அவர் நிரூபித்தார்.இந்தப் புதிய எழுத்து முறையை உருவாக்கியபோது அவருக்கு 20 வயதுகூட பூர்த்தியாகவில்லை. அவரது இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டி, ஊக்கப்படுத்திய பள்ளியின் இயக்குநர், பள்ளியிலும் அதை அறிமுகம் செய்தார். பட்டப்படிப்பு முடித்த பிறகு அதே பள்ளியில் லூயிஸ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 6 புள்ளிகள் கொண்ட பிரெய்லி முறையின் முதல் புத்தகத்தை 1829-ல் அவர் வெளியிட்டார். இதே முறையைப் பயன்படுத்தி History of France என்ற நூலை அவரது பள்ளி நிர்வாகம் 1837-ல் வெளியிட்டது. தொடர்ந்து அறிவியல், கணிதம் தொடர்பான பிரெய்லி எழுத்து முறை புத்தகங்களை அவர் வெளியிட்டார். தன் நண்பர் பியரியுடன் இணைந்து பிரெய்லி முறை தட்டச்சு இயந்திரத்தையும் லூயிஸ் தயாரித்தார். ;லூயிஸ் கண்டுபிடித்த புதிய எழுத்து முறையை ஆரம்பத்தில் கல்வியாளர்களும், அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் சற்றும் மனம் தளராமல் தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் மத்தியில் இந்த எழுத்தைப் பற்றித் தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார்.தனது முயற்சிகளுக்கு சமுதாய மற்றும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற தொடர்ந்து போராடியும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பார்வையற்றோர் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைத்த மேதை லூயிஸ் பிரெய்லி காசநோயால் பாதிக்கப்பட்டு 1852 ஜனவரி 6-ம் நாள் தனது 43-வது வயதில் உயிர் நீத்தார்.மரணத்திற்குப் பிறகு இவர் கண்டுபிடித்த ஆறு புள்ளிகளை ஆதாரமாகக் கொண்ட எழுத்து முறை படிப்படியாகத் தொடர்ந்து பிரபலமடைந்தது. அவர் இறந்த பிறகுதான் கல்வியாளர்களால் இந்த மொழியின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பார்வையற்றவர்கள் மத்தியில் அது தொடர்ந்து அங்கீகாரம் பெற்று வந்தது.எனவே, அரசும் அதன் பிறகு விழித்துக்கொண்டு அந்த எழுத்து முறையை ஏற்றுக்கொண்டது. அவர் கண்டுபிடித்த பிரெய்லி எழுத்துமுறை, அவர் பிறந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் இன்று ஒட்டுமொத்த உலகிலும் இருக்கும் பார்வையற்றோர் அனைவருக்கும் ஒரு வரமாக அமைந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது!– க.கதிரவன்

You may also like

Leave a Comment

18 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi