புதுச்சேரி, அக். 31: பழ வியாபாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி தேங்காய்திட்டு செல்வா நகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார் (23). பழக்கடை வியாபாரி. இவரது தம்பிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணி (எ) கியா மணி (20), அரியாங்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்கிற வெங்காயம் (21) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சஞ்சய்குமார் தட்டிக்கேட்டு, கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி, வெங்கடேசன் காலி மது பாட்டிலில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பி திரி வைத்து பற்ற வைத்து சஞ்சய்குமார் வீட்டின்மீது நேற்று வீசியுள்ளனர். ஆனால், இடையில் திரி பிடுங்கிக் கொண்டு கீழே விழுந்துள்ளது. பாட்டிலும் ரோட்டில் விழுந்துள்ளது. இதனால் சஞ்சய்குமாரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து சஞ்சய்குமார், முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மணி, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.