கோவை, அக். 23: கோவை ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் நியாஷ் முகமத் (31). நெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியின் உறவினர் நாகராஜ் (46) அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில், நேற்று முன்தினம் நாகராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை நியாஷ் முகமத் கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாகராஜ் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து தனது நண்பரை அழைத்துகொண்டு மீண்டும் அங்கு வந்த நாகராஜ் நியாஷ் முகமத்திடம் தகராறு செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பர் ராமகிருஷ்ணன் (40) ஆகிய இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் நியாஷ் முகமத்தை தாக்கினர். தடுக்க முயன்ற அவரது மனைவியையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நியாஷ் முகமத் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளிகள் நாகராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.