கோவை, ஜூன் 16: கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் ஜெய்லாபுதீன் (55). மர வியாபாரி. இவருக்கு, குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஷாஜகான் (52), கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த லிபு (45) ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது. இவர்கள் டில்லியில் இருந்து கார் வாங்கி கேரளாவில் விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றனர். இதைத்தொடர்ந்து, ஜெய்லாபுதீன், கார் வாங்க 20 லட்சம் ரூபாய் தந்தார். பின்னர், கருத்து வேறுபாட்டினால் கார் வியாபாரத்தில் இவர் ஈடுபடவில்லை. தனது பணத்தை திரும்ப அவர் கேட்டார். இதைத்தொடர்ந்து ஷாஜகான், 5 லட்சம் ரூபாய் தந்தார். மீதமுள்ள பணத்தை தரவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
சம்பவத்தன்று குனியமுத்தூரில் ஜெய்லாபுதீன் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த லிபு, ஷாஜகான் ஆகியோர் அவரிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் குத்தினர். இதில், காயமடைந்த இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக, குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஜெய்லாபுதீன் தங்களை கத்தியால் தாக்கியதாக கூறி லிபு, ஷாஜகான் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். போலீசார் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.