சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட தெருவியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். ஆர்எஸ்பி மாநில செயலாளர் ஜீவானந்தம் துவக்கி வைத்து பேசினார். தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். மாநில அமைப்பாளர் அறவாழி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினார். இதில், 50க்கும் மேற்பட்ட தெருவியாபாரிகள் கலந்து கொண்டு கோசம் எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட தலைவர் ரவி கூறுகையில், “மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க போஸ் மைதானத்தில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கம்மங்கூழ், ரெடிமேட் துணிகடை, கறிக்கடைகளுக்கு மாற்று இடம் தருவதாக அப்புறப்படுத்தினார்கள். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் தள்ளு வண்டியில் கடை போட அனுமதி கேட்டு, பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களின் வாழ்வாதாரம் கருதி தள்ளுவண்டி தெருவோர வியாபாரிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்,’’என்றனர்.