கடலூர், செப். 2: கடலூர் மாவட்டம் பழமையான மாவட்டம் என்ற நிலைபாட்டில் நெய்வேலி சர்வதேச அளவில் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட தொழில் ரீதியான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்திய அளவில் மின்சார உற்பத்தியில் கடலூர் மாவட்டம் நெய்வேலி முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. துரிதமான போக்குவரத்துக்கு விமான சேவை இன்றியமையா தேவையாக உள்ளது. நெய்வேலியில் இருந்து விமான போக்குவரத்து சேவை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கடலூர் எம்பி டாக்டர் விஷ்ணு பிரசாத் நெய்வேலி பகுதியில் விமான போக்குவரத்து சேவையை நவீன மயமாக்கல் மற்றும் வணிக ரீதியான நிலைப்பாட்டில் ஏற்பாடுகளை செய்து தொடங்கிட வேண்டும் என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் விமான போக்குவரத்து ஒன்றிய அமைச்சகம் நெய்வேலியில் விமான சேவை அமைப்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி விமான நிலையம், நிலக்கரி அமைச்சகத்தின் உடான் திட்டத்தின் கீழ் ஆர்சிஎஸ் விமானங்களை மேம்படுத்துவதற்கும் இயக்குவதற்கும் அடையாளம் காணப்பட்டது, அதன் வளர்ச்சிக்காக ரூ.15.38 கோடி ஒதுக்கப்பட்டது. ஜூன் 30, 2024 வரை ரூ.14.98 கோடி செலவிடப்பட்டு வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
டிஜிசிஏ ஆய்வு மற்றும் உரிமம் வழங்குதல் நடந்து வருகிறது. நெய்வேலியில் இருந்து சென்னைக்கு ஆர்சிஎஸ்-ன் கீழ் விமானங்கள் விமான நிலைய தயார் நிலையில் ஏர் டாக்ஸி மூலம் (9 இருக்கைகள் கொண்ட விமானத்துடன்) தொடங்கலாம். ஏடிஆர் விமான நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தை மேம்படுத்துவது விமான நிலையத்தின் உரிமையாளரான என்எல்சிக்கு சொந்தமானது. இவ்வாறு தெரிவித்துள்ளது. இதனால் நெய்வேலியில் விரைவில் விமான சேவை துவங்குகிறது என தெரிகிறது.