போரூர், ஜூன் 19: விமானத்தின் அவசரகால கதவு திறக்கும் பொத்தானை அழுத்திய பொறியியல் கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் எச்சரித்து அனுப்பினர். சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, 164 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமாயின் அறையில் அவசர கால கதவு திறக்கப்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி அடித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள் உடனே, பயணிகளிடம் அவசரகால கதவு திறந்தது யார்? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது விமானத்தின் அவசரகால கதவு அருகே அமர்ந்திருந்த, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவசர கால கதவை திறப்பதற்கான பட்டனை அழுத்தியதாக விமானிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த இளைஞர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடந்து, அதிகாரிகள் விசாரித்ததில், ‘அந்த இளைஞர் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஓம்கார் ஷாகா (19) என்பதும், விடுமுறையில், சொந்த ஊருக்கு விமானத்தில் கொல்கத்தா சென்றபோது கைதவறி அவசரகால கதவு திறக்கும் பொத்தன் மீது பட்டதும் தெரிய வந்தது.
ஓம்கார் ஷாகா கூறிய காரணத்தை ஏற்க மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரி மாணவனை விமானத்தில் இருந்து கீழே இறக்கி அலுவலகம் அழைத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 163 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றது. இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் ஓம்கார் ஷாகாவை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, போலீசாரிடம் ஓம்கார் ஷாகா கைதவறி அவசரகால கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதாக தெரிவித்து மன்னிப்பு கோரினார். இதையடுத்து, இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது, என்று எழுதி வாங்கிக்கொண்டு ஓம்கார் ஷாகாவை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.