பெரம்பலூர்,மே.12: பெரம்பலூர் அரசு மருத்துவ மனை அருகே விபத்தை ஏற்படுத்தும் சாலைப் பள்ளம். தண்ணீர் தேங்கி இருப்பதால் தடம் தெரியாமல் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம். விரைந்து சீரமைக்க கோரிக்கை. பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கும் இடையே பெரம்பலூர் துறையூர் சாலையை, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்துடன் இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.
துறையூரிலிருந்து, செட்டிக் குளத்தில் இருந்து பெரம்பலூருக்கு வருகின்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், மினி பஸ்களும், அரசு மருத்துவ மனைக்கு அடிக்கடி மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ்களும் வாகனங்களும், இலகு, கனரக வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் அதிகம் பயன் படுத்துகின்ற பிரதான சாலையாக இந்த சாலை உள்ளது.
இந்த சாலையில் அரசு தலைமை மருத்துவ மனையின் மேற்கு புற நுழைவாயில் எதிரே சாலையில் 15 அடி நீளத்திற்கு ஐந்து அடி அகலத்திற்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு பள்ளம் உள்ளது. இங்கே சிறிய மழைக்கும் நாள் கணக்கில் தண்ணீர் தேங்கி இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் இதர வாகன ஓட்டிகளும் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் தண்ணீரில் இறங்கி தடுமாறி விழுந்தால் எதிரே உள்ள அரசு மருத்துவ மனையில் தான் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டி உள்ளது. எனவே அரசு மருத்துவமனை வாசலில் உள்ள இந்த தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தை விரைந்து சீரமைத்து விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.